search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்"

    மக்கள் வைத்த நம்பிக்கையை ஜெகன்மோகன் ரெட்டி நிச்சயம் காப்பாற்றுவார் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்தார்.
    நகரி:

    நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே படம் ஆந்திராவிலும் வருகிற 31-ந்தேதி தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதுகுறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐதராபாத் வந்த நடிகர் சூர்யா ஆந்திரா அரசியல் குறித்து நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவர் குடும்பத்தை சேர்ந்த அனில் ரெட்டி என்னுடன் படித்தவர். ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி சாதித்த வெற்றி அபூர்வமானது. அவரது தந்தை முதல்வராக இருந்த போது அவர் அமல்படுத்திய பல நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு எவ்வளவு பயன் அளித்தது என்பது தெரியும். எதிர்பாராத வகையில் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிறகு ஜெகன்மோகன் ரெட்டி செய்து வரும் அரசியல் போராட்டம் குறித்தும் தெரியும். 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியிலேயே இருந்து எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தார். 14 மாதங்கள் 3664 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.


    எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் காப்பாற்றும் குணம் அந்த குடும்பத்திற்கு ஒரு சிறப்பு அம்சம். அதனாலேயே மக்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து இமயமலை அளவுக்கு பொறுப்பையும் கொடுத்துள்ளனர். அவர்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர் நிச்சயம் நிலை நிறுத்துவார். வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். மிகக்குறைந்த வயதில் முதல்வரான இரண்டாம் நபர் ஜெகன்மோகன் ரெட்டி என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் மீண்டும் முதல்வராக வெற்றிபெற்று ஆட்சியில் நீடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ‘‘யாத்ரா’’ என்ற சினிமா படம் வெளியிடப்பட்டது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    இந்தநிலையில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய அரசியல் போராட்டம், பாதயாத்திரை, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை வைத்து யாத்ரா-2 படம் தயாரிக்க உள்ளதாகவும் அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறித்து நிருபர்கள் கேட்டனர், அதற்கு சூர்யா பதில் கூறும்போது, ‘‘யாத்ரா’’ படத்திற்கு நல்ல டீம் அமைந்தது. மாபெரும் வெற்றியும் பெற்றது. ‘‘யாத்ரா-2’’ குறித்து இன்னும் யாரும் என்னோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கதை அனைவரையும் கவரும் விதமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் சந்தேகமே இல்லை என்றார்.
    ஆந்திர முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நகரி:

    ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார்.

    இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார்.

    கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவினார்.


    ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். ரோஜா பிரசாரம் செய்த இடங்களில் 97 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ரோஜாதான் அங்கு கேம் சேஞ்சராக மாறி உள்ளார். அதனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
    ஆந்திர முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று காலை ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
    திருமலை:

    ஆந்திராவில் நடந்த பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நாளை ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி இவர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    விஜயவாடாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் ரெட்டியை சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருமலை - திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அங்கிருந்து காரில் ஜெகன்மோகன் ரெட்டி ரேணிகுண்டா- தரக்கம்பாடி சாலை வழியாக அலிபிரி சென்று திருமலைக்கு வந்தார்.

    ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சியினர் பல முக்கிய சந்திப்புகளில் வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு 7 மணியளவில் திருமலைக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டியை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ்சில் தங்கிய ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை 7 மணியளவில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.

    அவருடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் உடன் வந்தனர்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த ஜெகன்மோகன் ரெட்டியை காண பக்தர்களும், கட்சி பிரமுகர்களும் முண்டியடித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



    கடந்த ஆண்டில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை சென்றார். திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு தான் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    பாதயாத்திரை நிறைவடைந்த பிறகு திருமலைக்கு வந்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    சென்னை:

    ஆந்திர முதல்-மந்திரியாக  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்  ரெட்டி  வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.


    ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.
    புதுடெல்லி:

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா? அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்றும், டெல்லியில் உள்ள ஆந்திர பவன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு சால்வை போர்த்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 
    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று கவர்னரை சந்தித்து ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
    ஐதராபாத்:

    ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.

    பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    ஐதராபாத் :

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.



    வாக்கு எண்ணிக்கையின்போது காலையில் வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்தது.

    காலை 10 மணி நிலவரப்படி 64 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரியவந்தது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 54 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
    ஆந்திராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. நேற்று இரவு அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

    ஆந்திராவில் மொத்தம் 175 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களை கைப்பற்றியது.

    கடந்த தேர்தலில் 1.6 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. எனவே இந்த தடவை அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவான நிலை தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ். என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 130 முதல் 135 இடங்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது.

    ஐ நியூஸ் நெட்வொர்க் நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகனுக்கு 122 இடங்கள் வரையும், சந்திரபாபு நாயுடுவுக்கு 65 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    சில கருத்து கணிப்புகளில் ஆந்திராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. லகத்பதி ராஜாகோபால் சர்வேயில் சந்திரபாபு நாயுடுவுக்கு 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதுபோல ஆர்.ஜி. பிளாஷ் நடத்திய கருத்து கணிப்பில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு 90 முதல் 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 65 முதல் 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 130 முதல் 135 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு 37 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான கருத்து கணிப்புகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அதிருப்தி அலை, ஊழல், ஜாதி அரசியல் போன்றவை தெலுங்கு தேசம் கட்சிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தோல்வி அடையும் பட்சத்தில் அவரது தேசிய அரசியலிலும் கடும் பின்னடைவு ஏற்படும்.

    நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அவரது கட்சிக்கு ஆந்திர மக்களிடையே அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் அந்த மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைப்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நவீன் பட்நாயக்கே தேர்ந்தெடுத்து இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    ஒடிசா மாநில சட்டசபையில் 147 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அங்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 74 இடங்கள் வேண்டும்.

    அங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி 80 முதல் 100 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாகக் கொண்ட கணக் நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் 85 முதல் 95 இடங்கள் நவீன் பட்நாயக்குக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


    25 முதல் 35 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #YSRC #JaganmohanReddy
    விஜயவாடா:

    ஆந்திர மாநிலத்திற்கு நாளை நடக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டைம்ஸ் நவ் நடத் திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி 43.7 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    அதுபோல சி.என்.என். நியூஸ் தொலைக்காட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த வி.டி.பி. அசோசியட்ஸ் என்ற நிறுவனமும் 2 தினங்களுக்கு முன்பு ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில், “ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு 54 முதல் 68 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் தெலுங்கு டி.வி. சானல் ஒன்று வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #YSRC #JaganmohanReddy
    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜனதா கட்சி சார்பிலும், அவரது கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress
    நகரி:

    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகிய இவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியான புரந்தேஸ்வரி, மாநில பிரிவினை காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.



    அரசியலில் இருந்து விலகி இருந்த அவரது கணவர் வெங்கடேஸ்வரராவ் சமீபத்தில் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகன் ஹிதேஷ் செஞ்சுராமுடன், ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர சட்டசபை தேர்தலில், பர்ச்சூர் தொகுதியில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனுக்கு பதிலாக வெங்கடேஸ்வர ராவ் போட்டியிட உள்ளார். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு கட்சியில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress
    ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். #YSRCPcandidates #APAssemblypolls #LSpolls
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.

    ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று சட்டசபை மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வெளியிட்டுள்ளார்.

    தற்போது கடப்பா மாநிலத்தில் உள்ள புலிவேந்துவல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.


    குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சந்திரமவுலி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனத்தலைவருமான டகுபதி வெங்கடேஸ்வர ராவ் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புர்ச்சூர் சட்டசபை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 43 பேருக்கு இந்தமுறை சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 41 தொகுதிகளும், சிறுபான்மையினத்தவர்களுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுப் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். #YSRCPcandidates #APAssemblypolls #LSpolls
    ×